75 ஆண்டுகளில் இல்லாத எல்நினோ அபாயம் - குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை
இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ நிலையாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜயமான்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த எல்நினோ நிலவரத்தை எதிர்கொள்ள அரசாங்கம் சிறந்த தயார் நிலையில், இருப்பதாக அமைச்சர் தம்மிக பட்டபெதி தெரிவித்துள்ளார்.
புதிய சுற்றறிக்கை
எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.

எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இன்று (20) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட விதிமுறைகள்
வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலகுவாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளும் வகையில், தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் அனைத்தும் வற்றிப்போயுள்ளன.
கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த கடும் வறட்சியால் பொலன்னறுவை மாவட்டத்தில் மெடிரிகிரிய கும்குனா குளம், காமிணி குளம் உட்பட பல குளங்கள் வற்றிப்போய் நெற்பயிர்கள் அழிந்து போயுள்ளன.
நீர்நிலைகள் வற்றியதால் கிராந்துருகோட்டே பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு மற்றும் நீர் தேடி வரத் தொடங்கியுள்ளன. மொணராகலை மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக காடுகளிலுள்ள புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் காய்ந்து நாசமாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |