இந்த ஆண்டு இறுதியில் தேர்தலுக்கான அறிவிப்பு?
உள்ளூராட்சி சபைத் தேர்தலை முதலில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
கிராம மட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை அடுத்த சில மாதங்களுக்குள் முடிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று குறைபாடுகள் மற்றும் முடங்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து மக்களின் பங்களிப்புடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2021 வாக்காளர் பட்டியலின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும். உள்ளூராட்சி தேர்தல் முறைமையை சீர்திருத்துமாறு கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கை போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் நடத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“எந்த தேர்தலுக்கும் நாங்கள் பயப்படவில்லை. மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இலகுவாக வெற்றிபெற முடியும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொவிட் தொற்றுநோயால் இழந்த இரண்டு ஆண்டு காலத்தை நீடிக்க அரசாங்கம் 'வாக்கெடுப்பு' நடத்தத் தயாரா என்று கேட்டதற்கு, பல சட்ட வல்லுநர்கள் பொதுவாக வாக்கெடுப்புக்குச் செல்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் எந்த நேரத்திலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
உள்ளூராட்சி அமைச்சருக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம், உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களின் பதவிக்காலம் 2023 பெப்ரவரி 10ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
