தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவர்! அரியநேத்திரன் பதிவால் எழுந்த சர்ச்சை
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் பொதுச் சபை உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை கோரிவருகின்றனர்.
இந்த நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களினதும் ஆதரவாளர்கள் முகநூலில் தலைவர் தெரிவு தொடர்பான தமது நிலைப்பாடுகளை வெளியிட்டுவருகின்றனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 20ஆம் திருகோணமலையில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைமை பதவிக்கான வாக்கெடுப்பு
இதனையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் தலைமைத்துவப் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், அன்றைய தினமே வெற்றிபெற்ற வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபையில் உள்ள 400 உறுப்பினர்கள் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த தேர்தலுக்கான வாக்குசீட்டுக்கள் அச்சிடப்பட்டு, வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுச் சபையிலுள்ள உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வகையில் பல பிரசாரங்களை நடத்திவருகின்றனர்.
சிறீதரனுக்கு ஆதரவு
கிழக்கை பொறுத்தவரை சக போட்டியாளரான சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் மறைமுகமாக சிவஞானம் சிறீதரனுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக எம் மண்ணில் விடுதலையை நேசிக்காத எவரும் இம் மண்ணை ஆள அருகதையற்றவர்கள் என தியாகி திலீபனின் நிழற்படத்தை பதிவிட்டுள்ள அரியநேத்திரன் கூறியுள்ளார்.
இதன்மூலம் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான நிலைப்பாட்டை பா.அரியநேத்திரன் எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வளர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |