மன்னாரில் 7 ஆயிரத்து 727 வாக்காளர்கள் அவுட்! தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர்.
எனவே, அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு ஆவன செய்யுமாறு தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த வாக்காளர்கள் அனைவரும் மீள்குடியேற்றத்துக்காக சொந்த மண்ணுக்குச் சென்று, தமது பூர்வீக பிரதேசங்களில் தங்களுக்கான கொட்டில்களையோ அல்லது தற்காலிக இருப்பிடங்களை அமைத்த பிறகு, அங்கு கல்வி, சுகாதார, வர்த்தக நடவடிக்கைகளில் குறைபாடு இருந்ததினால் அல்லது இருப்பதற்கு ஒழுங்கான வீடுகள் இல்லாத காரணத்தினால், மீள்குடியேறிய இடங்களிலிருந்து தற்காலிகமாக மீண்டும் புத்தளத்துக்கு வந்திருக்கின்றனர்.
இவர்கள், மீள்குடியேறிய பிரதேசங்களில் உரிய வசதிகள் கிடைத்தவுடன் மீண்டும் அங்கு செல்வதற்கு விருப்பத்துடன் இருக்கின்றனர்.
அவ்வாறு ஆர்வத்துடன் இருக்கின்றவர்களின் வாக்குப் பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.