வற் வரி தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் : மொட்டு கட்சியின் விளக்கம்
இலங்கையில் பெறுமதி சேர் வரி குறைக்கப்பட்ட போது, அதனை எதிர்த்த தரப்பினர் தற்போது குறித்த வரி அதிகரித்தமை தொடர்பிலும் கருத்து வெளியிடுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த வரியின் நடைமுறை காரணமாக மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக அமையும்.
தேர்தல்கள்
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெற வேண்டிய அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென நம்புகிறேன்.
எனினும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒரு தேர்தலுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அல்லது அதற்கு பின்னர், நாடாளுமன்ற தேர்தலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் நடத்தப்படுமென நான் நம்புகிறேன்.
கட்சியின் நிலைப்பாடு
இதற்கமைய, எமது கட்சியின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்கும் வேலைத்திட்டத்தை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்கி இலங்கையை பாரியளவில் அபிவிருத்தி செய்தது. இதனை அனைவரும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
சூழ்நிலைக்கேற்ப தேர்தல்
உலகில் எந்தவொரு நாடும் வெற்றி பெறும் சூழ்நிலையில் திட்டமிட்டு தேர்தல்களை நடத்தாது.
அரசியலமைப்புக்கு ஏற்ப அந்தந்த நாடுகளில் உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இதுவே சட்டம்.
இதற்கமைய, தமது விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சியாளரை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
பெறுமதி சேர் வரி
பெறுமதி சேர் வரியை குறைத்தமை தொடர்பில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியன இதற்கு ஆதரவாக அப்போது வாக்களித்தன. பின்னர் அதனை ஏன் குறைத்தீர்கள் என காலிமுகத்திடல் போராட்டத்தின் போது எம்மிடம் கேள்வியெழுப்பினார்கள்.
தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பெறுமதி சேர் வரியை அதிகரித்தமை குறித்தும் விமர்சிக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |