மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு: மின்சாரத்தை இணைத்த பெண் கைது!
வவுனியா கணேசபுரம் பகுதியில் மின்கம்பியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(17) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
தோட்டம் ஒன்றை சுற்றிப்போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சாரவேலியில் மின்சாரம் தாக்கியதில் குறித்த யானையானது உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனை
உயிரிழந்த யானையானது சுமார் எட்டு அடி உயரமுள்ள 25 வயதுடையது எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காட்டு யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை வடமாகாண கால்நடை வைத்தியர் கிரிதரனால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் குறித்து அனுமதியின்றி மின்சார வேலி அமைத்து, மின்சாரத்தை இணைத்த தோட்டத்தின் உரிமையாளரான 50 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
