இந்தியாவுடனான 7 ஒப்பந்தங்கள்: விமல் வீரவன்சவின் அதிரடி எச்சரிக்கை
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் அவற்றை இரகசியமாக பேண வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும், கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் எனவும், இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
“மக்களாணைக்கு முரணாக அரசாங்கம் திருட்டுத்தனமான முறையில் 2025.04.05 ஆம் திகதி 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.
அழுத்தம் பிரயோகித்த இந்தியா
ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் குறித்த ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.
1987ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இந்தியா கடும் அழுத்தம் பிரயோகித்தது. இதன் விளைவாகவே இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன் காரணமாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் கைச்சாத்திடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது சிபா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தார்.
அரசியல் தரப்பினர் மற்றும் சிவில் தரப்பினரின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.
பல ஒப்பந்தங்கள்
இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்தே இந்தியா வரலாற்று காலம் முதல் பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய பிரதமர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் இதுவரையில் நாடாளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் ஒப்பந்தங்களை இரகசியமாக பேண வேண்டும். இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோம்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
