இலங்கை உட்பட 3 நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள எலிசபெத் எம். அலன்
அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு அவர் விஜயம் செய்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக இந்த விஜயம் அமைகின்றது.
ஜோர்தானுக்கு விஜயம்
இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன் கருத்து சுதந்திரம், பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் அலனின் விஜயம் முக்கியத்துவமாக காணப்படுகின்றது.
மூன்று நாடுகளுக்குமான விஜயத்தில் ஜோர்தானுக்கு சென்ற அலன், ஜோர்தானிய இளைஞர்கள் மீது ஆங்கில மொழி திட்டங்களின் மாறத்தக்க தாக்கத்தை ஆராய்ந்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஒரு கருவியாக ஒருங்கிணைந்த, புதுமையான மூலோபாய தகவல் தொடர்புகள் குறித்து ஆராய, அந்நாட்டு வெளியுறவுத்துறை பொது விவகார நிபுணர்கள் மற்றும் ஜோர்தான் அரசாங்க அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தினார்.
அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றம்
அத்துடன் அமெரிக்க பொது இராஜதந்திரத் திட்டங்களின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடன் பிராந்திய முன்னோக்குகள் குறித்து கலந்துரையாடினார்.
ஜோர்தானுக்கான விஜயத்தின் பின்னர், இலங்கைக்கு வருகைதரும் அலன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்க ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், சுதந்திரமான மற்றும் இந்தோ - பசுபிக் பகுதியை ஊக்குவிக்கும் நோக்கில் சந்திப்புக்களை மேற்கொள்வார்.
இலங்கைக்கான விஜயத்தின்போது, ஊடகவியலாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றம் உட்பட பலதரப்பட்டவர்களுடன் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
மும்பை பல்கலைக்கழகத்தில்
அலனின் இறுதி விஜயமான இந்தியாவுக்கான பயணம் அமைகின்றது. இதன்போது, பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவார்.
வணிகத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்ட முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.
பெண்களின் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக அமெரிக்க - இந்திய புலம்பெயர்ந்தோர், பெருநிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் வணிகத் துறையுடன் அமெரிக்காவின் மூலோபாய மற்றும் நீடித்த ஒத்துழைப்பைக்கள் குறித்து ஆராயவுள்ளார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள குழு விவாதத்திலும் அலன் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |