இலங்கை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் : சிறிலங்கா அதிபர் தெரிவிப்பு
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார மாற்றம் தொடர்பான திட்டத்தை எதிர்வரும் வரவு செலவு திட்ட உரையின் போது முன்வைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களைக் கொண்டு வரவும் எதிர்பார்த்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி
இலங்கை கடந்த காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தை பின்பற்ற ஆரம்பித்திருந்தால் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இதனை பயன்படுத்தியதால் தற்போது அபிவிருத்தியடைந்த நாடுகளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை என தெரிவித்த சிறிலங்கா அதிபர், தற்போது இலங்கை தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்து முன்னேற தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தன்னிறைவுமிக்க பொருளாதாரம்
அத்துடன், ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல, நாட்டின் வர்த்தக நிலையை சாதகமானதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதோடு, ஏற்றுமதியிலும் தன்னிறைவாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் புதிய பொருளாதாரத்தை கட்டமைக்க மற்றும் வர்த்தக தன்னிறைவை தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் உலக நாடுகளுடன் போட்டியிடக்கூடிய வகையில் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு, பசுமை பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி என்பன தீர்மானமிக்க காரணிகளாக அமையும் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரம்
இதேவேளை, இலங்கை விரைவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும் எனவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போட்டித்தன்மை மிக்க பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களை கட்டமைப்பதற்கான சட்டங்களை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு சட்டங்கள் மாத்திரம் போதுமானதல்ல எனவும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்