கொழும்பு வைத்தியசாலை ஊழியரின் சட்டவிரோத செயற்பாடு - சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை
போயா தினமன்று வீட்டில் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் 20 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.
புலத்சிங்கள, கோவின்ன, பஹல நாரகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு காலத்தில் புலத்சிங்கள மற்றும் மஹரகம வைத்தியசாலைகளில் சிற்றூழியராக கடமையாற்றி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை சிற்றூழியர்
54 வயதுடைய குறித்த சந்தேக நபர் நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதுடன் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னரும் பல குற்றங்களைச் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் நான்கு பக்கங்களிலும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு மிகவும் திட்டமிட்டு கவனமாக கசிப்பு விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
சுடுநீர் போத்தல்களில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு
விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புப் பொதிகள் வீட்டின் சுடுநீர் போத்தல்களில் மறைத்து வைக்கப்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள பெரிய பீப்பாய்க்குள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று (6) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், புலத்சிங்கள காவல் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உப காவல் பரிசோதகர் துலஞ்சன ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இந்தச் சுற்றிவளைப்பில் கலந்துகொண்டது.