இங்கிலாந்தில் வரலாறு காணாத வறட்சி..! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட தொடங்கியது. 1935-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது.
ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வறட்சி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் 35 பாகை செல்சியஸ்சிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. நான்கு நாள் வெப்ப அலைத் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தின் சில பகுதிகளில் வறட்சி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்த நிலையில் அத்தியாவசிய நீர் விநியோகத்திற்கு இதுவரை அச்சுறுத்தல் ஏற்படவில்லை என நீர் வழங்கல் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாக பிரித்தானிய நீர் வழங்கல் துறை அமைச்சர் ஸ்ரிவ் டபிள் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய நீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டியது அவர்களினது கடமை என்பதை அரசாங்கம் என்ற வகையில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் வறட்சியின் தாக்கங்களை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்ரிவ் டபிள் மேலும் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிவிப்பு
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் "நீர் ஆதாரங்களில் உள்ள அழுத்தங்கள் குறித்து மிகவும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என சுற்றுச்சூழல் நிறுவனம் அறிவித்துள்ளது.
நீரை, புத்திசாலினத்தமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
புயல் தாக்கம் ஏற்படலாம்
இதேவேளை, இங்கிலாந்தில் வறட்சியான நிலைமையானது நீண்டநாட்களுக்கு நீடிக்கும் என்பதுடன், அடுத்த வாரம் புயல் தாக்கம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது குறுகியதாக இருந்த போதிலும் தீவிரமான ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
