வன ஒதுக்கீட்டு பகுதிகளிற்குள் பிரவேசிக்கத் தடை!
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பு காப்பகங்களுக்குள் செல்வது, அங்கு உள்ள மலைகளில் ஏறுவது மற்றும் முகாமிடுவது ஆகிய செயற்பாடுகளிற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (4) முதல் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
அண்மையில் தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அனுமதி பெற வேண்டும்
நேற்று முதல், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மலைகளை யாரேனும் பார்வையிடவோ அல்லது ஏறவோ விரும்பினால் அதற்கு முன்னதாக குறித்த மலைப்பகுதிகள் யாருடைய எல்லைக்குள் வருகிறதோ அந்த அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்புதல் சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்ல அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
பயணத்தின் முடிவில், தங்கள் சுற்றுப்பயணம் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் முடிந்ததாக காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
நேரில் சென்று கூறமுடியாவிட்டால் அழைப்பை மேற்கொண்டாவது தெரியப்படுத்த வேண்டும். என்று புதிய சட்ட ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உரிய அனுமதிகள் இன்றி மலை ஏறும் அல்லது முகாமிட்டதற்காக வனப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் நுழையும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நந்தன கலபடா கூறினார்.