EPF முறைகேடு : தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காகத் தொழிலாளர் திணைக்களத்தின் இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஊழியர்கள் தற்போது தொழிலாளர் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாக நேரடியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு அறிவிப்பு
இதற்கமைய தொடர்பு விபரங்களை வழங்கும் நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் அறிவிக்கப்படும் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் அனுப்பப்படுவதுடன், பின்னர் நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகையை மீட்க அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என தொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பின்னரும் நிறுவனங்கள் நிதி செலுத்தத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அபராதத்துடன் கூடிய நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 22,450 நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்துவதில் தவறிழைத்துள்ளதாக நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய சட்டம்
இவற்றின் மொத்த நிலுவைத் தொகை சுமார் 3,498 கோடி ரூபாய்க்கும் (34,989,162,957.81 ரூபாய்) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இது, இலங்கையின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

சட்டத்தின்படி, ஊழியர்கள் தங்கள் மாத வருமானத்தில் குறைந்தபட்சம் 8 சதவீதம் பங்களிக்க வேண்டும், அதேவேளை முதலாளிகள் 12 சதவீதம் பங்களிக்க வேண்டும். 2024 இறுதி நிலவரப்படி, இந்த நிதியத்தின் சொத்து மதிப்பு 4.4 டிரில்லியன் ரூபாய் ஆகும்.
ஓய்வூதியக் கால ஆதரவு மட்டுமன்றி, வீட்டுக்கடன் உத்தரவாதம், மருத்துவம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக ஒரு பகுதியைத் திரும்பப் பெறும் வசதிகளையும் இது வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |