'கொவிட் 19' இன் மையமாக மாறும் ஐரோப்பா - பெப்ரவரி மாதத்திற்குள் ஏற்படவுள்ள பேரழிவு
உலக சுகாதார ஸ்தாபனம், (WHO) ஐரோப்பா மீண்டும் 'கொவிட் 19' இன் மையமாக மாறும் விளிம்பில் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் 'கொவிட் 19' உயிரிழப்புகளின் எண்ணிக்கை 500,000 ஐத் தாண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து தற்போது தினசரி பதிவாகும் நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் ஐரோப்பிய நாடுகள் சார்பில் நியமிக்கப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ‘ஹான்ஸ் க்ளக்’ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
'கொவிட் 19' குறித்து நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
'கொவிட் 19' தொற்றுநோய் டிசம்பர் 2019 இன் பிற்பகுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹானில் தொடங்கியது. மார்ச் 2020 இல், வைரஸ் ஐரோப்பாவிற்கு பரவியது.
கொவிட் 19 தொற்றுநோயால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான தொற்றுநோய்கள் பரவின.
இன்று, மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தொற்றுநோய்களும் இறப்புகளும் பதிவாகத் தொடங்கியுள்ளன.
வைரஸைக் கட்டுப்படுத்த பயனுள்ள தடுப்பூசி திட்டங்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று ஹான்ஸ் க்ளக் ஊடகங்களுக்கு விளக்கினார்.
ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசி மெதுவாகவும் சீரற்றதாகவும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்பெயினில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் 80 சதவீதமாக இருந்தது, ஆனால் பிரான்சில் இது 68 சதவீதமாகவும் ஜெர்மனியில் 66 சதவீதமாகவும் இருந்தது என்று ஹான்ஸ் க்ளக் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் இறுதிக்குள், ரஷ்யர்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே முழு தடுப்பூசியைப் பெற்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.