பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்க இலங்கையுடன் கைகோர்க்கும் அவுஸ்திரேலியா!
இலங்கை முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்க அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க அவுஸ்திரேலியாவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியமும் (UNFPA) இணைந்து செயல்படுகின்றன.
அண்மையில் நாட்டைத் தாக்கிய பேரழிவால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து 500,000 அவுஸ்திரேலிய டொலர்கள், மிகவும் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் உயிர்காக்கும் சேவைகள், பரிந்துரைகள் மற்றும் உளவியல் ஆதரவை வலுப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.
அவசரகால வேண்டுகோள்
இந்த முயற்சி ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால வேண்டுகோளையும், ஒரு வருட மறுமொழித் திட்டத்தையும் ஆதரித்துள்ள நிலையில் இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளை மேலும் மேம்படுத்தும் என ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

கடுமையான மீட்புப் பணியின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள், கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள், வயதான பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுடன் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சர் ஜூலியன் ஹில், “இந்த கடினமான நேரத்தில் அவுஸ்திரேலியா இலங்கை மக்களுடன் நிற்கிறது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மூலம் எங்கள் ஆதரவு பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் சிறுமிகள் அத்தியாவசிய சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்பை அணுகுவதை உறுதி செய்யும்.
இந்த பேரழிவிலிருந்து சமூகங்கள் மீண்டு வரும்போது கண்ணியத்தைப் பாதுகாப்பதும் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஒரு முன்னுரிமையாகும்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |