ஜிஎஸ்பி பிளஸ் விவகாரம்- சிறிலங்காவிற்கு விஜயம் செய்யும் ஐரோப்பிய ஒன்றியம்!
சிறிலங்காவிற்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது குறித்து தீர்மானிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழு இன்று திங்கட்கிழமை சிறிலங்காவிற்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்கிறது.
ஒக்டோபர் 5ஆம் திகதி வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் குறித்த குழு, அரச உயர்மட்டம், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம், முதலாளிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை குறித்த குழு சந்திக்க உள்ளது. இந்த குழு, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ச உட்பட அரசாங்கப் பிரதிநதிகளை சந்திக்கவுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து குறித்த குழு கலந்துரையாடவுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது உட்பட மனித உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதால் ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இரத்து செய்யும் யோசனை உள்ளடங்கிய தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றியது.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் இடைநிறுத்தப்பட்டது.
அப்போதைய நல்லாட்சி அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை செயற்படுத்துவது குறித்த உத்தரவாத்திற்கு அமைய, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.
இந்த நிலையில்சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்று மேற்படி ஐவர் கொண்ட குழு அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக அமைத்துள்ள குழுக்களின் செயற்பாடுகளையும் அவற்றின் அறிக்கைளையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடத்தில் வெளிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், 500மில்லியன் டொலர்களுக்கான வர்த்தகத்துக்கான சலுகை வரி கிடைக்குமென எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.