சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
சூடானில் நிலவும் நெருக்கடி காரணமாக வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சிசிர செனவிரத்ன அவர்களை வரவேற்றுள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் உதவியால் அவர்கள் வெளியேறியுள்ளனர்.
ரியாத் மற்றும் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் ஜெட்டாவில் உள்ள இலங்கை துணை தூதரகம் ஆகியவை சவூதி அரேபிய அரசு மற்றும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கார்ட்டூமில் வசிக்கும் இலங்கையர்களை மீட்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர்களின் வெளியேற்றம் சாத்தியமாகியுள்ளது.
சூடானின் நிலைமையை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சூடானில் இன்னும் இருக்கும் இலங்கை பிரஜைகளுக்கு எப்போதும் உதவ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தயாராக உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
