சுதந்திரக்கட்சியுடன் இணைந்தால் அழிவுதான் - ஆதாரங்களை புட்டு வைக்கும் ஆளும் தரப்பு எம்.பி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதனுடன் இணைந்து ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் அழிந்துவிட்டதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் உடனடியாகத் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தின் பிரதிக் கொறடா பிரமித பண்டார தென்னக்கோன்(Pramitha Bandara Tennakoon,) தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 1956 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்த பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி வரை இந்த நிலைமை வழமையாக காணப்பட்டது.
1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் போது மக்கள் ஐக்கிய முன்னணி அழிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், 1970-77 அரசாங்கத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்த அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
2004 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று 3 ஆசனங்களாகக் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய தென்னக்கோன், இலங்கையின் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 2015 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தற்போது1 ஆசனமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, பொதுஜன பெரமுனவும் இந்த நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும், அனைத்துக் கட்சிகளையும் அழித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இன்னும் கூட்டணி வேண்டுமா என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தால் அந்த கட்சி அழிந்து போவதை தவிர்க்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.