சுனாமியை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் : ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!
சுனாமி அனர்த்தங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சர்வதேச ஒத்துழைப்பும் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இன்று (05) வெளியிட்ட செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கடலோர உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் நிலப் பயன்பாட்டைத் திட்டமிடுதல் மற்றும் பல்வேறு பேரிடர்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கங்கள் முதலீடு செய்ய வேண்டும்.
சுனாமி விழிப்புணர்வு
அத்துடன், அறிவியல் ஆய்வுகள், தரவுப் பரிமாற்றம் மற்றும் பேரிடர் முன்னறிவிப்புகள் தொடர்பில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும், அவசரகால செயற்திட்டங்களைத் தயாரித்து, ஒத்திகைப் பயிற்சிகளிலும் பங்கேற்க வேண்டும்.

குறிப்பாக, முறைசாரா குடியிருப்புகளில் வாழ்பவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
“சுனாமியை எதிர்கொள்ளத் தயாராவோம்: மீள்திறன் உங்களிடமிருந்தே ஆரம்பமாகிறது” என்பதே இவ்வாண்டுக்கான உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தின் தொனிப்பொருளாகும்.
சுனாமி தாக்கும் சந்தர்ப்பங்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்“ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |