கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடை : சிஐடிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை (CID) நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டக் குழுவினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (28) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அந்தநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். எனினும், இந்த வழக்கில் மனுதாரராக உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விசாரணையின் போது முன்னிலையாகவில்லை.

அதன்படி, பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது குறித்த கோரிக்கை தொடர்பாக, நவம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதிபதி உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பல முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் மீது வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, வெளிநாட்டுப் பயணத் தடையை எதிர்கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ச, இன்று (28) நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவருடைய வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவொன்று தொடர்பாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், அவருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய விடயம் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் அண்மையில் (21) தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின்னரான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ச சார்பில்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், அந்த மனுவில் காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாக அது நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |