கோட்டாபயவின் இலங்கை வருகையில் திடீர் மாற்றம்! இறுதி தருணத்தில் எட்டப்பட்ட முடிவு
தாய்லாந்தில் உள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, வருகை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச் செய்தி வெளியாகியுள்ளது.
கோட்டாபயவின் வெளியேற்றம்
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தன.
மக்களின் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கோட்டாபய சிங்கப்பூரில் ஒரு மாதம் அளவில் தங்கியிருந்தார்.
பின்னர் சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்த நிலையில் அங்கிருந்து தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டது.
கோட்டாபயவின் இலங்கை வருகை
ஆனால் தற்போது எதிர்வரும் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருக்கிய தரப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும், அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச இலங்கை வந்தால் போராட்டங்கள் வெடிக்கலாம் என ஊகிக்கப்பட்ட நிலையில், பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, படையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இந்த உத்தரவு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.