பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரத்திற்கான பரீட்சைகளை பிற்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான மாற்று திட்டங்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தள வசதிகள் மற்றும் இணையக் கல்விக்கான உபகரணங்கள் உரிய வகையில் மாணவர்களுக்கு கிடைக்காமையினால், ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இ
ருப்பினும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் பரீட்சைகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
2021ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சைகளை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒக்டோபர் 3ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை 2022ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.