முல்லைத்தீவில் பணியாற்றிய இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது முல்லைத்தீவு இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீட்டிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாத்தறை திஹாகொட, கொட்டாவத்தை பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் வீட்டின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக மாத்தறை தலைமையக காவல்துறையினர் இன்று (09) தெரிவித்தனர்.
தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்
அதன்படி, 48 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் என்பவரும் காவல்துறையினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். அவரது இரண்டு மாடி வீட்டின் தோட்டத்தில் 5 அடி ஆழத்திற்கு இரண்டு குழிகள் வெட்டப்பட்டு இராணுவ உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெடிபொருட்களுடன் சந்தேகநபரின் வீட்டில் 153 மதன மோதக மாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பதிகாரி
விடுதலைப் புலிகளின் போரின் போது, முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் 05 வருடங்களாக ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பாளராக இவர் இருந்தமை தெரியவந்துள்ளது.
அப்போது எடுத்துச் சென்று இந்த வெடிபொருட்களை புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை
இந்த வெடிபொருட்கள் வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய, சந்தேகப்படும்படியான இராணுவ உறுப்பினர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட உள்ளார்.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் மிரிஸ்ஸ முகாமின் கடற்படை புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாத்தறை தலைமையக காவல்துறையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
