எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இழப்பீடு மீனவர்களை சென்றடையுமா!
இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதியாளர்கள், சிறிலங்கா அரசாங்கத்திடம் இடைக்கால இழப்பீட்டு தொகையை செலுத்தியுள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதியாளர்கள், தீயினால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான இழப்பீடாக 8 இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடலை சுத்தம் செய்வதற்காக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏற்பட்ட செலவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான இழப்பீடாக மேலதிகமாக 16 மில்லியன் ரூபாவையும் காப்புறுதியாளர்கள் சிறிலங்காவின் திறைசேரிக்கு செலுத்தியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நட்டஈடு பரிந்துரை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலானது 2021 மே மாதம் 2ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வெடித்து விபத்துக்குள்ளானதில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்படைந்தனர்.
குறித்த சுற்றுப்புற பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்ள அமைக்கப்பட்ட நிபுணர் குழு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 6.2 பில்லியன் டொலர்களை நட்டஈடாக பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.