தயாரானது எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு அறிக்கை - இழப்பீடு குறித்து மௌனம் சாதிக்கும் அரசாங்கம்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதி சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உரிய நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது பொருத்தமானது என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை முன்னர் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தது.
முழுமையான மதிப்பீடு
எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடி, Express Pearl கப்பலால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி திருமதி சுதர்ஷனி லஹந்தபுர, சுற்றாடல் பாதிப்பின் முழுமையான மதிப்பீடு இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
மேலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
பாதிப்புக்கான இழப்பீடு குறித்து இதுவரை அரசாங்கம் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

