எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய அனுமதி
சிறிலங்கா அரசாங்கத்தினால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர்வதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, குறித்த வழக்கானது சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தில் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கப்பல் மூழ்கியதன் காரணமாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை பெறும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்
இந்த வழக்கு விசாரணைக்கு முன்னதாக, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் விரிவான முறைப்பாடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கில் கப்பல் நிறுவனம் முழுமையான ஆட்சேபனைகளை சமர்ப்பித்ததை அடுத்து நீதிமன்றம் உரிய அனுமதியை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஹசிரா துறைமுகத்தில் இருந்து, 25 தொன் நைட்ரிக் அமிலம், இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளடங்கலாக 1,486 கொள்கலன்களுடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக்கு வருகை தந்தது.
இலங்கை கடற்பரப்பிற்கு பாதிப்பு
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கே 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த சரக்கு கப்பல் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி தீப்பரவலுக்கு உள்ளானது.

தொடர்ந்து, கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
அத்துடன், விமானப்படையின் உலங்கு வானூர்திகளைக் கொண்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பட்ட நிலையில் கப்பல் கடலில் மூழ்கியது.
இதன் காரணமாக இலங்கை கடற்பரப்பில் பல்வேறு உயிரினங்கள் அழிந்துபோனதுடன், அதன் பாதிப்பை இலங்கை இன்றுவரை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்