தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதி புனர்நிர்மாண பணிகள்: அமைச்சரின் அறிவிப்பு
சுமார் 12 வருடங்களாக புனர்நிர்மாணம் செய்யப்படப்படாத தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான ஆரம்ப விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புனர்நிர்மாணம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2028 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள சித்திரை புதுவருடப் பிறப்புக்கு முன்னர் இந்த மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டம் பூரணமாக நிறைவேற்றப்படும்.
இரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான கட்டுமானப் பணிகள் இவ்வாண்டினுள் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நுழைவாயில் வீதியின் பணிகள் 98 வீதம் நிறைவடைந்துள்ளன, இங்கிரிய தொடக்கம் இரத்தினபுரி வரையிலான வீதி அபிவிருத்தி செய்யப்படும்.
அதிவேக நெடுஞ்சாலை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதி சுமார் 12 வருடங்களாக புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை.
தற்போது குறித்த வீதியில் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரே ஒரு சேவை நிலையம் மாத்திரமே காணப்படுகின்றது, உடுகாவ பிரதேசத்தில் மற்றுமொரு சேவை நிலையத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
வீதி அபிவிருத்தி
கட்டுநாயக்கவில் பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்ட பின்னர் மாத்தறையில் கட்டணம் செலுத்தக் கூடிய விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
இதன்போது, கெலவரபிட்டியவில் மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவையிருக்காது, இன்னும் இரண்டு மாத காலப்பகுதியில் குறித்த திட்டங்கள் பூரணப்படுத்தப்படும்.
எதிர்காலத்தில் தேசிய வீதி அபிவிருத்தி போக்குவரத்து திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
