இலங்கையில் ஏற்படப்போகும் உணவுத் தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் அடுத்த ஆண்டு கடுமையான உணவுப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய விவசாய சம்மேளனத் தலைவர் அநுராத தென்னகோன் (Anuradha Tennakoon) தெரிவித்துள்ளார்.
நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தத்தினால் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறிகள் மற்றும் பழச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கைக்கு அதிக சேதம்
குறிப்பாக, மட்டக்களப்பு, குருநாகல், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நெற்செய்கைக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையான சேதமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 2 இலட்சத்து 53,000 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாகவும், 4 இலட்சத்து 20,000 ஏக்கர் வயல் நிலங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
மரக்கறி பயிர்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்ட 30 ஆயிரம் ஏக்கர் முழுமையாகவும், 33 ஆயிரம் ஏக்கர் பகுதியளவிலும் அழிவடைந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |