அனைத்து விடயங்களிலும் தோல்வி - வெட்கம் இல்லாத அரசுக்கு ஆடைகள் தேவையில்லை - வெளிவரும் கடும் குற்றச்சாட்டு
அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது. எனவே அதற்கு வெட்கம் என்பது இல்லை அதற்கு ஆடைகள் தேவையில்லை என ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிழையான ஆலோசனைகளை அடிப்படையாக கொண்ட தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக பொதுமக்கள் சுமையை சுமக்கவேண்டியுள்ளது.
பொருளாதாரத்தை தவறாக கையாண்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வானளவிற்கு உயர்ந்துள்ளன என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு தேர்தல்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி காரணமாக பொதுமக்கள் பெரும்பான்மையை வழங்கினார்கள். ஆனால் பொதுமக்களால் அரிசி தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கம் பல வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் விலைகள் குறையவில்லை.
பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரில்வின் சில்வா, ஆடைகள் போன்ற அடிப்படை பொருட்களிற்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போதைய கட்டுப்பாடுகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.