கருணாவுக்கு போலி இராஜதந்திரக் கடவுச்சீட்டு: சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டு
விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா இங்கிலாந்துக்குச் செல்வதற்காக, சுரேஷ் சலே உள்ளிட்ட இரண்டு புலனாய்வு அதிகாரிகள் போலி இராஜதந்திரக் கடவுச்சீட்டை ஏற்பாடு செய்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, நேற்று (21) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருணா இங்கிலாந்துக்குச் சென்ற பின்னர், சுரேஷ் சலே அவரைச் சந்திக்கச் சென்றதாகவும், எனினும் சலே அந்தச் சந்திப்பை மறுப்பதாகவும் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சலேவிடம் மூன்று கடவுச்சீட்டுகள்
மேலும் கருத்து வெளியிட்ட அவர், குறித்த சந்திப்பின் இரண்டு நாட்களுக்குப் பின்னர், போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கருணா பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

குறித்த கடவுச்சீட்டு, சுற்றாடல் அமைச்சின் முன்னாள் செயலாளர் துஷ்மந்த குணவர்தன என்ற பெயரில் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும், அந்தப் பெயரில் உண்மையில் ஒருவர் இருந்தாரா என்பதைக் கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விபரங்களை வெளிவிவகார அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், சுரேஷ் சலேவிடம் இரண்டு அல்லது மூன்று கடவுச்சீட்டுகள் இருந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவை
இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றக் குழாம் விசாரித்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிரதிவாதிகளும், தாங்கள் சிறைக்குச் சென்றாலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் வெளியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த கூற்றுகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவை. மில்ஹான், ரிஸ்கான் மற்றும் ஸைனுல் ஆப்தீன் ஆகிய மூவரிடமும் மேலதிக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக எட்டு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்றை கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்ப அனுமதி கூறப்படுகிறது.
2026 ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கின்றேன்" என்றார்.
இந்நிலையில், சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, முறைப்பாட்டாளர் தரப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
சலேவிடம் பல கடவுச்சீட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகின்றபோதிலும், அவற்றின் இலக்கங்கள் அல்லது அவை சட்டபூர்வமாகப் பெறப்பட்டவையா என்பது தொடர்பான விபரங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கருணாவுக்கான கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதியில் சலே பிரான்ஸில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியதாகவும், அவ்வாறிருக்கையில் இலங்கையில் கடவுச்சீட்டை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு எவ்வாறு சாத்தியமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முயற்சிகள் சலேவைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதை நியாயப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |