சாரா ஜாஸ்மினை அடையாளம் கண்ட புலனாய்வு அதிகாரி
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் (புலஸ்தினி மகேந்திரன்) என்பவரை, தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் இராணுவத்திற்குத் தகவல்களை வழங்கும் ராஜன் என்பவர் அடையாளம் கண்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் மூவர் அடங்கிய சிறப்பு நீதிமன்ற குழு முன்னிலையில் நேற்று (21) இடம்பெற்ற விசாரணைகளின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தனது சமர்ப்பணங்களை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ''இராணுவத்தில் இணைக்கப்பட்டிருந்த கோப்ரல் சுரங்க என்பவருக்கு, இராணுவத்திற்குத் தகவல்களை வழங்கும் ராஜன் என்பவர் இந்தத் தகவலை வழங்கியுள்ளார்.
பிரதேச மொழி அல்ல
கோப்ரல் சுரங்க இந்த ராஜனை, தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைதாரி இன்சாஃப்பின் மாமனாரின் வீட்டிற்கு யார் வந்து செல்கிறார்கள் என்று பார்க்க அனுப்புகிறார்.

ராஜன் பிறவழிகளின் ஊடாக அந்த வீட்டிற்குச் செல்கிறார். அங்கு செல்லும்போது அந்த வீட்டில் புர்கா அணிந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் இருக்கிறார்கள்.
அவர்கள் இருவருடனும் இவர் பேசுகிறார். அந்தப் பெண் தமிழ் மொழியில் பேசினாலும், அது அந்தப் பிரதேசத்துக்குரிய மொழி அல்ல என்பதும், அது மட்டக்களப்பு பேச்சு வழக்கு என்பதும் ராஜனால் கோப்ரல் சுரங்கவுக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்த ராஜன் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கிறார். அதன் பிறகு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. அப்போதே ஊடகங்களில் சாரா ஜாஸ்மினின் புகைப்படங்கள் வெளியாகின்றன.
தடுப்பதற்கான செயல்பாடு
அன்று தான் பார்த்தது சாரா ஜாஸ்மின் என்பதை ராஜன் அடையாளம் கண்டு, அதை கோப்ரல் சுரங்கவுக்குத் தெரிவிக்கிறார். சுரங்க, 'அதை பெரிதுபடுத்த வேண்டாம், மறந்துவிடுங்கள்' எனக் கூறுகிறார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னரும் கிடைத்த தகவல்கள் விசாரிக்கப்படுவதைத் தடுக்க இவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாக புலப்படுகிறது. அது சுரேஷ் சலேவின் அறிவுருத்தலின் பேரிலாகும்" என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |