அதிபர் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்: ஐ.நாவின் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை (UN) தகவல் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டாக போலியான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.
முன்னணியில் ஐக்கிய மக்கள் சக்தி
மேற்படி, பரப்பப்பட்ட போலியான தகவல்களில் படி சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முன்னணி வகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, மொட்டு கட்சி அடுத்த இடத்தையும், அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe ) தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை அனுர குமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பெற்றுக்கொள்ளும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் 339 வீதத்தினால் உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உறுதியான ஆதாரங்கள்
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறான ஓர் கருத்துக் கணிப்பை மேற்கொள்ளவில்லை என அறிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையினால் இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, இதற்கு முன்னர் நடைபெற்ற அதிபர் தேர்தல்களின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக் கிளையினால் கருத்து கணிப்பு நடத்தப்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |