பொட்டம்மானின் புகைப்படமும் புலம்பெயர் குழப்பங்களும்
விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ‘உயிருடன் இருக்கின்றார்’ என்றும்.. ‘இல்லை இல்லை அவர் வீரமரணமடைந்துவிட்டார்’ என்றும் செய்திகள், வதந்திகள் வெளிவந்து புலம்பெயர் ஊடகப்பரப்பில் சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.
பொட்டம்மான் உயிருடன் இருப்பதான செய்திகள் வதந்திகளாகக் கசியவிடப்பட்டு வருகின்றனவே தவிர யாருமே அவர் உயிருடன் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அப்படியிருக்க, பொட்டம்மானுடைய புகைப்படம் என்கின்ற பொருள்பட ஒரு புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தது.
அது பொட்டம்மானின் புகைப்படம் என்று யாரும் உறுதிப்படுத்தாவிட்டாலும், உயிருடன் இருக்கும் பொட்டம்மானின் புகைப்படம் என்கின்ற கோணத்தில்தான் அந்தப் புகைப்படம் இனந்தெரியாத சிலரால் வைரலாக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட அந்தப் புகைப்படம் தென்ஆபிரிக்க நாடொன்றில் வசிக்கும் ஒரு லத்தின்அமெரிக்க நபரின் LinkedIn profile இல் வெளியிடப்பட்ட சுயகோவையில் இருந்து எடுத்து வெளியிடப்பட்டது என்று பின்னர் தெரியவந்தது. Dos Anjos Antonio Carlos Silva என்ற நபருடைய புகைப்படம் அது என்பதுடன், ஒரு வருடத்துக்கு முன்னர் பதிவேற்றப்பட்ட புகைப்படம் என்பதையும் தேடி எடுத்து ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள் சில புலம்பெயர் செயற்பாட்டாளர்கள்.
இந்த விடயத்தில் புலம்பெயர் மக்களால் எழுப்பப்படுகின்ற சில கேள்விகள்:
• பொட்டம்மானின் புகைப்படம் என்று எதற்காக வேறொருவரின் புகைப்படம் வெளியிடப்பட வேண்டும்?
• பொட்டம்மான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவா குறிப்பிட்ட அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டது?
• பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றார் என்பதை நிரூபிக்க விரும்பினால், அவர் உயிருடன் இருக்கின்ற அவருடைய உண்மையான புகைப்படங்களை விதம் விதமாக வெளியிடலாம் தானே?
• பின்னர் எதற்காக யாரோ ஒருவரின் புகைப்படத்தை பொட்டம்மானினுடையது என்று ஏமாற்றி வெளியிட வேண்டும்?
• ‘பொட்டம்மானைக் கண்டனான், தலைவருக்கு மூலவியாதி..’ என்று கதைவிட்டுத் திரிந்த பெரியம்மா வகையறாக்களுக்கும், இந்தப் புகைப்படத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?
• அவர் இருக்கிறார் இவர் இருக்கிறார்..’ என்று சொல்லிக் காசுசேர்த்துத்திரியும் கும்பலுக்கும், இந்தப் போலிப் புகைப்படம் வெளியிடப்பட்டதற்கும் தொடர்பு இருக்கின்றதா?
• புலம்பெயர் மக்களை எந்த நேரத்திலும் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்கின்ற உளவியல் யுத்தத்தின் மற்றொரு நடவடிக்கைதானா இந்தப் புகைப்பட விளையாட்டு?

