FCIDயின் அழைப்பாணையைப் புறக்கணித்த ஷிரந்தி : குற்றச்சாட்டை மறுக்கும் ராஜபக்ச குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ராஜபக்ச குடும்பம் நிராகரித்துள்ளது.
ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாடு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
அதன்படி, குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று குறிப்பிட்ட ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்ட கடிதம்
குடும்ப உறுப்பினர் தெரிவித்ததாவது, ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் கூறினார்.
அழைப்பாணை அனுப்பப்படவில்லை
முன்னதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |