அதிகாலைவேளை நடுவீதியில் வைத்து குடும்ப பெண் படுகொலை
அதிகாலைவேளை வேலைக்கு செல்வதற்காக சென்ற குடும்ப பெண்ணொருவர் நடுவீதியில் வைத்து இனந்தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இபலோகம - ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹிரிபிட்டியாகம - மைலகஸ்வெவ பிரதேசத்தில் வசித்து வரும் ஏ.எம்.சமந்திகா அதிகாரி என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.
வேலைக்கு சென்றவேளை சம்பவம்
அவர் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள தேங்காய் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் இன்று அதிகாலை 05.00 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் கிளை வீதியில் வைத்து நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்ணின் மூத்த மகளும் அதே இடத்தில் வேலை செய்கிறார், எனவே அவரும் தனது வீட்டிலிருந்து இந்த வழியால் வந்துள்ளார். இதன்போது, காயங்களுடன் வீதியில் கிடந்த தனது தாயை பார்த்து, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கொலையின் பின்புலத்தில் கணவன்...
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்ததாகவும், இது தொடர்பில் இப்பலோகம காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் இப்பலோகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் மைலகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது இளைய பிள்ளையையும் அழைத்துக்கொண்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அவரது கணவரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் இப்பலோகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
