தற்போதைய அரசாங்கம் விவசாய சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை!
இலங்கையில் அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்கும் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துகின்றோமே தவிர, விவசாய சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி சனத் பண்டார ஏகநாயக்கவினால்(Sanath Bandara Ekanayake) “மாற்றம் நல்லது விவசாயி அனாதரவில்”என்ற தொனிப்பொருளில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். இதன் போது கருத்துத் தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda aluthgamake), மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச(Sasinthira Rajabaksha) ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன.
ஹசலக்க பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல, முன்னாள் அமைச்சர் லக்ஷமன் செனவிரத்ன,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தொகையான விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோரின் உருவப் பொம்மைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச,
நான் கொண்டு வரும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் விவசாயிகளை பாதுகாக்கும் அடிப்படை உரிமைகளும் உள்ளடக்கப்படும். ஆட்சியாளர்கள் நாட்டின் விவசாயிகளுடன் தனது இஷ்டத்துக்கு ஏற்ப விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் .
தற்போது இருப்பது போல் தரமற்ற உரம் நாட்டுக்கு கொண்டுவரப்படாது. நானோ நைட்ரஜன் மோசடிகள் நடக்காது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விவசாயிக்கு அநீதி இழைக்கப்பட்டால் உச்சநீதிமன்றம் சென்று நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.