முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் போது பல உறவுகளை பறிகொடுத்த தந்தையின் கண்ணீர் மல்கிய கதை!
முள்ளிவாய்க்காலில் (Mullivaikkal) யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் முள்ளிவாய்க்காலில் பிதிர்கடனை நிறைவேற்றி அஞ்சலியை செலுத்தி தனது சோக தடங்களை கூறியிருந்தார்.
இது தொடர்பில் அவர் கூறும் மேலும் போது , கிளிநொச்சி (Kilinochchi) திருவையாற்றினை நிரந்தர வதிவிடமாக கொண்ட எங்களுடைய உறவுகள் 25 பேர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு (Mullaitivu) வலயர்மடம் பகுதியில் பதுங்குகுழிகள் அமைத்து அங்கே இருந்தோம்.
2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி அன்று நள்ளிரவு வேளையில் பாரிய சத்தம் கேட்டது. நாங்கள் இருந்த பதுங்குழிக்கு மேலுள்ள மரத்திற்கு மேல் எறிகணைகள் விழுந்தது. என்னுடைய உறவுகள் 12 பேர் அவ்விடத்திலே இறந்து விட்டனர்.
12 உறவுகளை பறிகொடுத்த தந்தை
அதில் நானும் காயமடைந்து சுயநினைவற்றிருந்தேன். அந்த இடத்தில் எங்களை பார்ப்பதற்கு யாருமே இருக்கவில்லை. 13 பேர் காயமடைந்திருந்தோம். நான்கு தினங்கள் கழித்து எங்களை ICRC கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்கள்.
அங்கே வைத்தியசாலையில் வைத்தே நடந்த விடயம் எனக்கு தெரியவந்தது. என்னுடைய மனைவியும் , இரண்டு பிள்ளைகளும் இறந்த சம்பவம் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து மீள் குடியமர எமது நிரந்தர இடத்திற்கு வந்து தற்போது இருக்கின்றோம்.
எம் நிலையை என்றுமே மறக்கமுடியாது ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவு நாளிற்கு வந்து எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றேன் என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |