மருத்துவரான மகன் வெளிநாடு : நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த தந்தை கைது
மருத்துவரான மகன் வெளிநாடு சென்ற நிலையில் மகனின் வைத்திய நிலையத்தை நடத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 66 வயதுடைய தந்தையை பியகம காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பியகம பண்டாரவத்தை பிரதேசத்தில் தகுதியற்ற வைத்தியர் ஒருவர் வைத்திய நிலையம் நடத்தி வருவதாக பியகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மகன் வெளிநாடு சென்ற நிலையில்
குறித்த வைத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட 66 வயதுடைய சந்தேகநபரின் மகன் வைத்தியர் என்பதும், 2017ஆம் ஆண்டு மருத்துவ நிலையத்தை பதிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அவர் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாடு சென்ற பின்னர், சந்தேகநபர் இதுவரை மருத்துவரான மகனின் பெயரைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
எந்த தகுதியுமற்றவர்
சந்தேக நபரின் கீழ் இரண்டு ஊழியர்கள் கடமையாற்றியதாக காவல்துறை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கோ அல்லது மருத்துவ நிலையத்தை நடத்துவதற்கோ தகுதியற்றவர் என மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |