யாழில் கைதான பெண் சட்டத்தரணி - சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் குமாரவடிவேல் குருபரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் நேற்று முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு பயணத்தடை
பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணியை 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று, அவர் வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது.
இந்நிலையில் தேடுதலுக்கான நீதிமன்ற கட்டளை இன்றி குறித்த பெண் சட்டத்தரணியின் வீட்டுக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று தமது சட்டத்தரணிகள் கடமைகளுக்குச் செல்லாது, எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலயத்திற்கான உப தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
