சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு : மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு
காவல்துறையினரின் சட்ட விதிமுறைகளை மீறிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாத்திரமே சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
அதைவிட, வழக்கு நடவடிக்கைகளில் தலையிடும் நோக்கத்திலோ அல்லது சட்டத்தரணிகளுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலோ இந்த பணிப்புறக்கணிப்பை செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கமானது தமது பணிப்புறக்கணிப்பு குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கை
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த 05.10.2025 அன்று மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் இல்லத்திற்கு சென்றிருந்த யாழ்ப்பாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் (SCIB) குறித்த சட்டத்தரணியின் இல்லத்தில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த சட்டத்தரணி வெளிமாவட்டம் ஒன்றிற்கு சென்றிருந்ததாக குறித்த சட்டத்தரணியின் குடும்ப அங்கத்தவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் பிடியாணையையோ அல்லது தேடுதல் ஆணையையோ சமர்ப்பிக்காத காவல்துறையினர் குறித்த சட்டத்தரணியின் இல்லத்திற்குள் சட்ட விதிமுறைகளை மீறி உள்நுழைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக நேற்றையதினம் (06.10.2025) இரவு கூடிய மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் காவல்துறையினரின் சட்ட விதிமுறைகளை மீறிய செயற்பாட்டினை கண்டித்தும் எதிர்காலத்தில் காவல்துறையினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதனை வலியுறுத்தியும் இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து மாத்திரம் விலகி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருத்தத்தினை தெரிவிக்கும் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் இந்த பணிப்புறக்கணிப்பானது "காவல்துறையினரின் சட்ட விதிமுறைகளை மீறிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலானது" மாத்திரமே ஒழிய வழக்கு நடவடிக்கைகளில் தலையிடும் நோக்கத்திலோ அல்லது சட்டத்தரணிகளுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கிடக்கூடாது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலோ இல்லாத ஒன்று என்பதனை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
