கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - போட்டுடைக்கும் சரத் பொன்சேகா
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு காவலரண்களில் இருக்கும் இராணுவத்தினர் காவல்துறையினருக்கு கப்பம் கொடுத்து மாற்றப்பட விடயத்தை கடுமையாக எதிர்த்ததாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து வெளியிடுகையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கொலை செய்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கப்பம் பெற்று கொலை
11 பேரில் ஒரு மாணவன் சிங்களவர், ஒருவர் முஸ்லிம் ஏனைய 9 பேர் தமிழர்கள். சிங்கள மாணவனின் அம்மா தமிழ், அந்த மாணவன் இரு தினங்களில் இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருந்தார்.
கரன்னாகொடவின் கீழ் இயங்கிய குழுவே அவர்களை கடத்தி திருகோணமலை கடற்படைத்தளத்தில் வைத்திருந்தனர்.
இவர்களிடம் கப்பம் பெற்றுக் கொண்டது மட்டுமல்ல கொலையும் செய்துள்ளனர். இந்த அட்டூழியங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
இராணுவத்தினர் காவல்துறையினருக்கு கப்பம்
நான் இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது கரன்னாகொட புலிகளுக்கு ஆயுதங்கள் கடலில் வருவதில்லை.
கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு அதுவும் பெரிய ஆயுதங்களான ஆட்லறிகள் தரை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வவுனியாவில் இருந்த காவலரண்களில் இருக்கும் இராணுவத்தினர் காவல்துறையினருக்கு கப்பம் கொடுத்து மாற்றப்படுவதாக தெரிவித்தார்.
நான் அச்சந்தர்ப்பத்தில் பெரும் வாக்குவாதப்பட்டேன். கடுமையாக அதை எதிர்த்தேன். அத்தோடு மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா கடற்படை தளபதியாக இருந்தார். நான் கண்ட சிரேஷ்ட கடற்படைத் தளபதி, நல்ல திறமைசாலி மற்றும் நல்ல மனிதர்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கூட பொருத்தப்படாத கப்பல் ஒன்றை டொலர் மில்லியன் 167 வாங்குவதற்கு முயற்சித்த போது சின்னையா எதிர்த்தார். அதனால் அவரை இரண்டு மாதங்களில் மைத்திரிபால வீட்டுக்கு அனுப்பினார்.
ஆனால் அந்த கப்பலை ஆயுதங்களுடன் வியட்நாம் டொலர் மில்லியன் 120க்கு வாங்கியது. இவ்வாறான நிலையிலேயே என்னையும் ஒதுக்கி வைத்தார் மைத்திரி. இவ்வாறான உறுதியற்ற தலைமை இருந்த சூழலே ஈஸ்டர் தாக்குதலுக்கும் வழி சமைத்தது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
