பண மோசடி வழக்கில் நிதி நிறுவன இயக்குனர் கைது
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி அதன் மூலமாக 9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (27) நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட 54 வயதுடையவர், என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணமோசடி
குறித்த சந்தேகநபர், சட்டவிரோதமான முறையில் நிதி நிறுவனத்தினை ஆரம்பித்து, அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனராகவும் பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து சுமார் 9,900 மில்லியன் ரூபாவை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.