தவிசாளர் அதிரடி : மட்டக்களப்பில் பூட்டப்பட்ட நிதி நிறுவனங்கள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் தமது காரியாலயங்களை வைத்திருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையில் வியாபார சான்றிதழைப் பெறாததனால், அந்நிதி நிறுவனங்கள் அனைத்தையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் இன்றயதினம் மாலை (18.09.2025) மூடவைத்துள்ளளார்.
வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டி வீதத்தை மக்களிடமிருந்து வசூலிக்கும் நிதி நிறுவனங்கள், என்பன இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அதிரடியாக பூட்டப்பட்டன.
இரண்டு தடவை இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மையில் இரு தடவைகள் பிரதேச சபைத் தவிசாளருக்கும், இந்நிதி நிறுவனங்களுக்குமிடையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வியாபார சான்றிதழ் மற்றும், அதிகூடிய வட்டி வீதத்தை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் பூட்டப்படும் என தெரிவித்திருந்தார். அதற்கிணங்க இன்றையதினம் மாலை தவிசாளரினால் நேரடியாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கதாகும்.
உயிருக்கு அச்சுறுத்தல் வந்தாலும் தயங்கமாட்டேன்
இந்நிலையில் தனது உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் தான் தயங்கமாட்டேன்,எனவும் மக்களுக்கு அதிக வட்டி வீதத்ததை வசூலிக்கும் நிதி நிறுவனங்களையும், எமது பிரதேச சபையில் வியாபாரச் சான்றிதழ் பெறாத அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



