எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்து விற்பனை: வர்த்தகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்
கண்டி பகுதியில் விற்பனைக்காக எரிவாயு சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருந்தும், தன்னிடம் சிலிண்டர்கள் இல்லை எனக் கூறி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
அத்துடன், சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட தலா 12.5 கிலோகிராம் எடையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் கண்டி மாவட்ட அலுவலக விசாரணை அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபை
இதன்போது, விசாரணை அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர் போன்று வேடமிட்டு, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றைக் கொள்வனவு செய்ய முயன்றுள்ளார்.

இதன்போது, தன்னிடம் எரிவாயு சிலிண்டர்கள் இல்லை எனக் கூறிய வர்த்தகர், விற்பனை செய்ய மறுத்துள்ளார்.
எனினும், பின்னர் குறித்த இடத்தைச் சோதனையிட்ட அதிகாரிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 12.5 கிலோகிராம் எடையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த சிலிண்டர்கள் வழக்குப் பொருட்களாக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், வர்த்தகருக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வர்த்தகருக்கு அபராதம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட 28 எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்க உத்தரவிட்டது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 16(அ) பிரிவின்படி, விற்பனைக்காகப் பொருட்களைத் தமது வசம், பொறுப்பில் அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவை தம்மிடம் இல்லை என நுகர்வோரிடம் தெரிவிப்பது சட்டவிரோதமான செயலாகும்.
நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பொருட்களைப் பதுக்கி வைத்தல், கையிருப்பில் பொருட்கள் இருந்தும் அவை இல்லை எனத் தவறான தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் சோதனைகள் மற்றும் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |