வங்காள விரிகுடாவில் பலத்த காற்று - ஆழ்கடல் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (03.11.2026) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முரசு’ சூறாவளி தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் நுழைந்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு நோக்கிய திசையில் வடமேற்காக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாள் மீன்பிடிப் படகுகள்
இந்தச் சூறாவளி இன்று காலை 11.30 மணியளவில் சாதாரண சூறாவளியாகவும், இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவிழக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என்பதால் குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபடுவோர் இந்த எச்சரிக்கை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்தச் சூறாவளி தொடர்பாக வெளியிடப்படும் இறுதி எச்சரிக்கை அறிவிப்பு இதுவாகும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |