முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு சென்ற தயிர் : நீதிமன்றம் விதித்தது அபராதம்
சுமார் 40,000 ரூபாய் மதிப்பிலான தயிரை, உரிய வெப்பநிலையைப் பேணாமலும் சுகாதாரத் தரநிலைகளைப் பின்பற்றாமலும் கொண்டு சென்ற இருவருக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றம் மொத்தம் 60,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட அவர்களுக்கு, 18 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட தயிர்
முல்லைத்தீவிலிருந்து வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள கூட்டுறவு நிறுவனம் ஒன்றிற்குத் தயிர் கொண்டு செல்லப்பட்டபோது, வவுனியா மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் (PHI) மேற்கொண்ட சோதனையின் போது இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

உரிய வெப்பநிலையைப் பேணாமல் தயிர் கொண்டு சென்றமை, மனித நுகர்வுக்கான உணவுப் பொருட்களைக் கால்நடைத் தீவனங்களுடன் சேர்த்து வைத்தமை, பதிவுச் சான்றிதழ் இன்றி உணவு தயாரித்தமை, உணவுப் பொதிகளில் ஒட்டப்பட வேண்டிய லேபிள்கள் தொடர்பான விதிமுறைகளை மீறியமை மற்றும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்களைக் கொண்டு சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களில் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து, அந்தத் தயிர் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, வவுனியா நீதவான் நீதிமன்றம் இந்த அபராதங்களையும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளையும் விதித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |