வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழு! ஜெனீவாவுக்கு பறந்த நீதியமைச்சர்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான முதலாவது இடைக்கால மீளாய்வு அமர்வு நாளை (26.09) இடம்பெறவுள்ளது.
இதன்போது, காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 14,988 முறைப்பாடுகள் தொடர்பில் மற்றும் காணமாலாக்கியமை தொடர்பில் இலங்கை இராணுவ உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதை இடைநிறுத்தியமை தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டமை
1983 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உள்நாட்டு போரினால் இடம்பெற்றதாக கூறப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மீளாய்வு செய்ய எதிர்ப்பாரத்துள்ளதாக ஜெனீவா செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த மீளாய்வின் போது காணாமல் போனோருக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலகம் இலங்கை பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
மீளாய்வு அமர்வு
இந்நிலையில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான குழுவின் முதலாவது இடைக்கால மீளாய்வு அமர்வில் பங்கேற்கும் நோக்கில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று (24.09) ஜெனீவா சென்றுள்ளனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் குழு இதன்போது விடயங்களை முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களம் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சாசனத்தின் ஒரு பங்காளராக இலங்கை 2016 ஆம் ஆண்டு முதல் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
