யாழில் சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களால் கடற்றொழிலாளருக்கு நேர்ந்த கதி
சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த பின்னணியில் கற்கோவளத்தில் கடற்றொழிலாளர் வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு கடற்றொழிலாளர் காயமடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 30 வயதான வ.வசந்தகுமார் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் மறிப்பு போராட்டம்
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை கடற்றொழில் மறிப்பு போராட்டத்தை குறித்த பகுதி கடற்றொழிலாளர் முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சட்டவிரோத மணற்கடத்தல் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கற்கோவளம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு இராமஜெயம் கருத்து தெரிவிக்கையில், “கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். கடந்த மாரி காலத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அத்துடன் இவ்வாறான சட்டவிரோத மணில் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காண்ப்படுகிறது. கற்கோவளம்- புனிதநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
சட்டவிரோத மணல் கடத்தல்
இவ்வாறான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் கடத்தலில் இந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிலரே வாகனங்களை வைத்து ஈடுபட்டு வருகின்றனமை வேதனையளிக்கிறது. இதனால் தொழில் நடவடிக்கை மட்டுமல்லாது அன்றாட செயற்பாடுகளையே முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்ற வகையில் எமது சங்கத்தில் இது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இனிமேல் இவ்வாறான சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்தியிருந்தோம்.
வரும் வழியிலேயே வழிமறித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் இதன்போது சென்றவர்களது மீன்பிடி வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் வாள்களுடன் வந்து மேற்கொண்ட இத்தாக்குதலில் இரு கடற்றொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
ஊராக ஒன்றுபட்டு நாங்கள் ஊரினதும் எமது மக்களினதும் நன்மைக்காக சென்று கதைத்துவிட்டு வந்ததை பொறுக்காது இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் அத்தனை பேரையும் காவல்துறையினர் கைது செய்யும் வரை கடற்றொழிலுக்கு செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு நேற்று முதல் தொழில் மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
உடனடியாக சம்பந்தப்பட்ட தரகப்பினர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண நடவடிக்கை எடுப்பதுடன் எமது பாதுகாப்பினையும் உறுதிசெய்ய வேண்டும்“ என தெரிவித்தார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
