நாட்டின் பல்வேறு இடங்களில் கோர விபத்துக்கள்: சிறுவன் உட்பட ஐவர் பலி
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிறுவன் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) அதிகாலை கொழும்பு - அவிசாவளை வீதியின் வெல்லம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது
முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த 14 வயது சிறுவன் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கடுவலை, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
லுணுவில
இதேவேளை, நேற்று மாலை லுணுவில காவல்துறை பிரிவிற்குட்பட்ட தும்மோதர - போலவத்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த செலுத்துனரான 18 வயது இளைஞன் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இவர் மஹவெவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த வாய்க்காலுக்குள்
மித்தேனிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலாவ, தெபொக்காவ பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வாய்க்காலுக்குள் வீழ்ந்ததில் அதனை செலுத்திச் சென்ற 31 வயதான நபர் உயிரிழந்தார்.

மேலும், வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹெந்தல - எலகந்த வீதியில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து கடையொன்றுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 மற்றும் 25 வயதான இரு இளைஞர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட விபத்துக்கள் தொடர்பில் அந்தந்தப் பகுதி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |