கொழும்பு வந்த விமானத்தில் நடுவானில் கோளாறு - அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இயந்திரக் கோளாறு தொடர்பில் விமானக் குழுவினரின் எச்சரிக்கையை அடுத்து விமானம் சென்னைக்கு திசைதிருப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் முழு எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் நேற்று இரவு ஏர்போர்ட்டில் பரபரப்பான சூழல் காணப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நடுவானில் ஏற்பட்ட இயந்திரம் பிரச்சினை
வியட்நாமின் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரிலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்த வியட்ஜெட் (VietJet) ஏர்லைன்ஸ் விமானம் , நடுவானில் ஏற்பட்ட இயந்திரம் பிரச்சினை காரணமாகச் சென்னை சர்வதேசவானுர்தி நிலையத்தில் நேற்று இரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

வியட்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த 'ஏர்பஸ் V320' (VJC1875) ரக விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 143 பேர் பயணித்தனர்.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு இயந்திரத்தில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுச் செயல்படாமல் போனது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக விமானத்தை சென்னைக்குத் திருப்பிவிடக் கட்டுப்பாட்டு அறை அனுமதி அளித்தது.
விமானம் தரையிறங்குவதற்காகச் சென்னை விமான நிலையத்தில் இரவு 9.55 அளவில் 'முழு அவசர நிலை' அறிவிக்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர சேவை நோயாளர் காவு வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடு
எனினும், அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க, இரவு 10.27 க்குச் சென்னை விமான நிலையத்தில், குறித்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இதனையடுத்து விமானத்தில் இருந்த 143 பயணிகளும் எவ்விதப் பாதிப்புமின்றிப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |